Populer Artikel

Sunday, September 4, 2011

அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில்


சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு “சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, “” நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி “மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது.

No comments:

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8